எம்மைப்பற்றி

'இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம், வடக்கு மாகாணம்' என்னும் எமது தொழிற் சங்கமானது 2021.05.05 ஆம் திகதி அன்று வடக்கு மாகாண அரச சேவையிலுள்ள தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கமாகக் கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இத் தொழிற்சங்கமானது எமது நாட்டின் தொழில் சார் சட்டங்களிற்கு அமைவாக, தொழில் திணைக்களத்தில் 2021.07.27 ஆம் திகதி 9506 எனும் தொழிற்ச்சங்கப் பதிவிலக்கத்தின் கீழ் ஒரு தொழிற்சங்கமாகப் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபையின் பாலனத்திற்குட்பட்ட பல்வேறுபட்ட அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் நிரந்தர தொழில்நுட்ப உத்தியோகத்தர்களாகக் கடமையாற்றி வரும் குடிசார்(Civil), மின்னியல் (Electrical), மற்றும் இயந்திரவியல் (Mechanical) தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் அனைவரும் எமது தொழிற்சங்கத்தில் இணைந்து அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

1994ம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணசபையாகச் செயற்பட்டு வந்த காலப்பகுதியில் தொழில் நுட்ப அலுவலர்களுக்கானதொரு தொழிற் சங்கம் ஒன்றின் தேவைகள் உணரப்பட்டு, தொழிற்சங்கம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வந்தது. பின்னாளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டதன் காரணமாக அவை வலுவிழந்த நிலைக்குச் சென்றுள்ளன.

எமது தொழிற் சங்கமானது, சகல அங்கத்தவர்களுடனும் இணைந்து அனைவரது நலன்களையும் பாதுகாக்கும் என்பதுடன் நியமனங்கள், பதவியுயர்வுகள், இடமாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டிய சட்டரீதியான சலுகைகள் என்பவற்றைச் சக உத்தியோகத்தர்களைப் பாதிக்காதவகையில் பெற்றுக் கொடுப்பதற்காகச் செயற்படுவதுடன், எமது தொழிற் சங்க உறுப்பினர்களுடைய வான்மை விருத்திக்குத் தேவையான பயிற்சிகளையும் காலத்திற்குக்காலம் செயற்படுத்தவும் எண்ணியுள்ளது..

இதற்கு மேலதிகமாக காலத்தின் தேவைக்கேற்ப சமூகநலன் சார்ந்த பல்வேறுபட்ட பொதுநலப் பணிகளிலும், பசுமையானதொரு எதிர்காலம் நோக்கியதான திட்டங்கள் உட்பட பல்வேறுபட்ட செயற்பாடுகளையும் எமது தொழிற்சங்க அங்கத்தவர்களின் உறுதியான பங்களிப்புக்களுடன் முன்னெடுக்க உத்தேசித்துள்ளோம்.

எமது மக்களிற்கான எமது பிரதேசங்களிற்கான அபிவிருத்திப்பணிகளில் வடக்கு மாகாண சபையுடன் இணைந்து காலநேரம் பாராது முனைப்புடன் சேவையாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் நலன்களையும், அதனோடு இணைந்து எமது மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளையும் முன்கொண்டு செல்வோம்.

-சுபம்-